தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த பொன்னம்பலம் - வனிதா தம்பதியின் மகன் அபினவ் யஸ்வந்த் (15). 10-ம் வகுப்பு படித்து வரும் இவர், தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பிரதமரால் அறிவிக்கப்பட்ட "பரிக்ஷாபே சச்சா 2023" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் அறிவிக்கப்பட்ட கட்டுரை போட்டியில் ‘கடமைகளில் கவனம் செலுத்துதல்’ என்ற தலைப்பில் தனது கட்டுரையை சமர்ப்பித்தார்.
இந்நிலையில், அந்த கட்டுரையை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, மாணவனுக்கு தமிழில் பாராட்டுக்கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் மோடி, “உங்களை போன்ற இன்றைய இளம் தலைமுறை மாணவர்களின் ஆற்றல், தன்னம்பிக்கை, திறமைகளை பார்க்கும்போது மிகுந்த பெருமிதம் அடைகிறேன்.
அடுத்த 25 ஆண்டு காலம், இந்தியாவின் அமிர்தமான காலம். புகழ்பெற்ற வளர்ந்த மற்றும் ஒருங்கிணைந்த தேசத்தை உருவாக்க உறுதியுடன் முன்னேற வேண்டிய நேரம் இது. வாழ்க்கையின் ஒவ்வொரு சோதனையிலும் நீங்கள் கண்டிப்பாக வெற்றிபெறுவீர்கள். உங்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி அனுப்பிய இந்த வாழ்த்து கடிதத்திற்கு மாணவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரின் பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அவருக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டியுள்ளனர்.
கடிதம் பெற்ற மாணவர் இதுபற்றி பேசுகையில், “என்னுடைய கட்டுரைக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் அனுப்பிவைத்தது எனக்கு பெருமையாக உள்ளது. எனக்கு இக்கடிதம் அதிக சந்தோஷத்தை தருவதோடு எனது பெற்றோருக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் பெருமையையும் கொடுத்துள்ளது” என நெகிழ்ச்சியாக கூறினார்.