கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 PT
தமிழ்நாடு

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023: சென்னை வந்தார் பிரதமர்! நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!

'கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023' விளையாட்டு போட்டியை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

Rishan Vengai

2023 கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு (Khelo India Youth Games-2023) போட்டிகளானது, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று முதல் நடத்தப்படவிருக்கிறது. ஜனவரி 19ம் தேதியான இன்று தொடங்கப்படும் இந்த விளையாட்டு போட்டிகள் ஜனவரி 31ம் தேதிவரை நடத்தப்படவிருக்கிறது. இந்த விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று தொடங்கிவைக்கிறார்.

2023 கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் (Khelo India Youth Games-2023)!

2023 கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், சென்னையில் மட்டுமல்லாமல் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களிலும் நடத்தப்படவிருக்கின்றன. தடகள விளையாட்டுகளான கால்பந்து, கபடி. வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஆக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.

நேரு விளையாட்டரங்கம்

இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இந்தியாவின் 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகப் பகுதிகளிலிருந்து 18 வயதிற்குட்பட்ட வயதுப்பிரிவில் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், 1,600க்கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்கின்றனர். போட்டிகளைச் சிறப்பாக நடத்திட 1,000க்கு மேற்பட்ட நடுவர்கள், 1,200க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் துணைபுரிவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரு விளையாட்டரங்கம்

2023 கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் முதல்முறையாக தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உட்பட மொத்தம் 27 விளையாட்டுகள் காட்சி விளையாட்டுகளாக ( DEMO Sports) இடம் பெறுகின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொன்றும் நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவை குறித்த விவரங்கள் விளையாட்டு ஆர்வலர்களுக்கு வசதியாக இணையம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு அரசு மாமல்லபுரத்தில் வெற்றிகரமாக நடத்தி புகழ்பெற்ற நிலையில், தற்போது கேலோ இந்தியா போட்டிகளும் நடத்தும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி! பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த முடிவு மேற்கொண்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசின் உயர் அலுவலர்கள், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் அனைவருடனும் இணைந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்தப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்துள்ளார்.

உதயநிதி - மோடி

கேலோ இந்தியா போட்டிகளை முன்னின்று தொடங்கிவைக்குமாறு, கடந்த 4ம் தேதி டெல்லிக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தற்போது சென்னைக்கு வருகை தந்துள்ளார். நேரு உள் விளையாட்டரங்கில் தற்போது தொடக்க விழா நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

மாலை 6.00 மணிக்கு ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கிவைக்கவிருக்கும் நிலையில், நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உட்பட மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், நிசித் பிரமாணிக் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

பிரதமர் மோடி

கேலோ இந்திய விளையாட்டு துவங்க விழா நிகழ்ச்சி நிரல் 

  • 6 மணி : பிரதமர் நரேந்திர மோடி நேரு விளையாட்டரங்கிற்கு வருகை.

  • 6.03 : தமிழ் தாய் வாழ்த்து

  • 6.05 : மேடையில் உள்ள சிறப்பு விருந்தினர்களை கெளரவித்தல்

  • 6.10 - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்துகிறார்

இதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது

* மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் உரையாற்றுகிறார்

* கேலோ இந்தியா பாடல் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் நடைபெறும்

* தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உரை நிகழ்த்துகிறார்.

* டிடி தமிழ் செய்தி தொலைக்காட்சியின் Logo மற்றும் பெயர் மாற்றம் செய்து பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

#தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒளிச் சுடரை வழங்குகிறார்கள்

*பிரதமர் நரேந்திரமோடி ஒளிச்சுடர்க்கு வெளிச்சம் பாய்ச்சுவார்

*பின்பு பிரதமர் உரை

*விளையாட்டு தொடர்பான குறும்படம் வெளியிடப்படுகிறது

*கேலோ இந்தியாவின் தமிழ் தீம் பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

*தமிழ் மொழியின் புரட்சி தொடர்பான காணொளி வெளியிடப்படும்.

*விளையாட்டு நடனம் நடைபெறுகிறது

*வான வேடிக்கையுடன் கூடிய கலை நிகழ்ச்சிகளும நடத்தப்படுகிறது.

பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்துள்ள நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.