பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக இன்று மாலை தமிழகம் வருகிறார். பெங்களூரில் இருந்து மாலை 4:50 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஐ.என்.எஸ் அடையாறு செல்கிறார். பின்னர் சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கம் செல்லும் அவர், கேலோ இந்தியா போட்டியை தொடங்கி வைக்கிறார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் கேலோ இந்தியா தொடக்கவிழா நிகழ்வை கண்டுகளிக்கும் பிரதமர், இரவு 7:45க்கு கார் மூலம் ராஜ்பவன் சென்று அங்கு தங்குகிறார். இரவில் மோடியுடன் பாஜக தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் பலர் சந்திக்கினறனர்.
பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை உட்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடியை சாலையில் இருபுறமும் இருந்து வரவேற்பதற்காக பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.