பிரதமர் மோடி PT Web
தமிழ்நாடு

மக்களவை தேர்தல் 2024 | பரப்புரைக்காக இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி

மக்களவை தேர்தல் பரப்புரைக்காக இன்று சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, தியாகராய நகரில் நடைபெறும் வாகன பேரணியில் பங்கேற்கிறார்.

PT WEB

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன. தேர்தல் நெருங்குவதால், தமிழகத்தில் அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய தலைவர்கள், தமிழகத்திற்கு தொடர்ந்து படையெடுத்துவரும் நிலையில், 2024-ல் ஏழாவது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு இன்று மீண்டும் வருகிறார்.

மாலை 4.10 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வருகைத் தரும் பிரதமர் மோடி, 6.30 மணியளவில் சென்னை தியாகராயநகரில் வாகன பேரணி நடத்த உள்ளார். தொடர்ந்து, கிண்டி ராஜ்பவனுக்கு சென்று இரவு ஓய்வெடுக்கும் அவர், நாளை காலை 9 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு புறப்படுகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்லும் பிரதமர், வேலூர் கோட்டை பகுதியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

அதைத் தொடர்ந்து சென்னை திரும்பும் பிரதமர், தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து, பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரையிலான 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகன பேரணி மூலம் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக, அந்த பகுதிகளில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாண்டிபஜார் பகுதியில் மட்டும் சுமார் 3,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதனிடையே, பிரதமரின் வாகன பேரணிக்கு தேர்தல் ஆணையம் 20 நிபந்தனைகளை விதித்துள்ளது. பிரதமர் மற்றும் மக்கள் கடந்து செல்லும் பாதைக்கு இடையே ஒரு இடைவெளி வைக்க வேண்டும் எனவும், சாலையின் இருபுறமும் இரண்டு அடுக்குகளில் தடுப்பு அமைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் செல்லும் பாதையின் சாலையோரங்களில் ஃப்ளெக்ஸ் பேனர்கள் மற்றும் கட் அவுட்கள் அமைக்க கூடாது; பட்டாசுகளை வெடிக்கக்கூடாது; சாதி, மத உணர்வுகளை தூண்டும்வகையில் முழக்கமிடக்கூடாது; பிரதமர் செல்லும் பாதையில் துண்டு பிரசுரங்கள் வழங்கவோ, அலங்கார வளைவுகள் அமைக்கவோ அனுமதி இல்லை என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பிரதமரின் வாகன பேரணிக்கு சென்னை காவல்துறை அனுமதி அளித்துள்ளது.