தமிழ்நாடு

கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் இறப்பு - பிரதமர் மோடி இரங்கல்

கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் இறப்பு - பிரதமர் மோடி இரங்கல்

Sinekadhara

கடலூர் மாவட்டம் கொடிலம் ஆற்றில் நீரில் மூழ்கி சிறுமிகள் உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் போலீஸ் சரகம் கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் ஓடும் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கோடை காலங்களில் தடுப்பணையில் உள்ளூர் மக்கள் குளித்து வரும் நிலையில் சமீபத்தில் பெய்த பருவ மழையினால் அதிக அளவு தண்ணீர் தடுப்பணையில் தேங்கியுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் அந்த பகுதியை சேர்ந்த பிரியா, மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்க சென்றபோது நீர் அதிகம் தேங்கி உள்ளது தெரியாமல் ஆழமான பகுதியில் குறித்துள்ளனர்.

அப்போது நீரில் சிக்கிக் கொண்ட சிறுமிகள் கூச்சலிட்டதை தொடர்ந்து உள்ளூர் மக்கள் அவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஏற்கெனவே 7 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடலூர் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் குழந்தைகள் பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து வருத்தம் அளிப்பதாகவும், குழந்தைகளை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.