திருச்சிக்கு இன்று (ஜனவரி 2) வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இவ்விழாவில் பிரதமர் மோடியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் பேசியது கவனத்தை ஈர்த்தது. அவர்களுடைய உரையில் இத்தனை விஷயங்கள் அடங்கியிருப்பதாகப் பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பத்திரிகையாளர் ஜென்ராம், “இருவரது பேச்சும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மணவர்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கையைக் கொடுக்கிறது. மாணவர்கள் தங்களது கல்வியை கற்றுக் கொண்டபிறகும் நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். பிரதமரும், முதல்வரும் கல்வி குறித்து சிறப்பாகவே பேசினார்கள். எனினும், இருவரும் பட்டமளிப்பு விழாவில் அரசியல் பேச மட்டார்கள் என்று நாம் நினைக்க முடியாது. இரண்டு பேரும் அவர்களின் அரசியலை மிகவும் தெளிவாக முன்வைத்து இருக்கிறார்கள்.
எல்லா மாநிலங்களில் இருந்தும் அவர்களுக்கு (பாஜக - பிரதமர் பேச்சில்) ஆதரவு கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். தமிழ்நாட்டில் இருந்து உறுப்பினர்கள் கிடைத்தால் அவர்களுக்கு நல்லது என்ற அளவில்தான் பாப்பார்கள். அதற்காக, தமிழ் நாட்டில் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து கவனத்தைச் செலுத்துவார்கள். அது எல்லாம் நடக்கும் உண்மைதான். ஆனால், அவர்களுக்கு எவ்வளவு இடம் வரும் என்று நாம் இப்போது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரத்தில், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியும் இல்லாத சூழலில் பாஜக தமிழகத்தின் தேர்தலைச் சந்திக்கப்போவதே ஒரு சவால்தான். அந்தச் சவாலை அவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை அடுத்தடுத்த மாதங்களில் பார்க்கலாம்.
(திமுக - முதல்வர்) அதேநேரத்தில் மீண்டும் பாஜகவுக்கு வாய்ப்பு அளித்துவிட்டால், அது மிகப்பெரிய விளைவுகளை இந்திய ஜனநாயக அமைப்புகளுக்குள்ளும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்குள்ளும் உருவாக்கக்கூடும் என்ற கவலையுடனும், அக்கறையுடனும் அதை முறியடிக்க எதிர்க்கட்சிகள் போராடும். அதற்கான முயற்சியில் தீவிரமான நடவடிக்கைகளில் களம் இறங்குவார்கள்” என்றார்.
இதுகுறித்து அவர் பேசிய கருத்துகளைக் கேட்க இந்த வீடியோவைப் பார்க்கவும்.
இதுகுறித்து பத்திரிகையாளர் சிவப்ரியன், “நாம் படித்து முடித்தவுடன் கல்விச் சான்றிதழ் என்பது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்தச் சான்றிதழ் இல்லாதபட்சத்தில் வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை. நடைமுறைச் சிக்கல்கள் மாணவர்களுக்கு அதிகமாக உள்ளது. பல்கலைக்கழகத்தில் நிறைய சிக்கல்கள் உள்ளன. கொரோனாவிற்குப் பிறகு சான்றிதழ் அளிப்பதற்கு நிறைய சிக்கல்களை மேற்கொண்டது பல்கலைக்கழகம். இதுபோன்ற காரணங்களால் சான்றிதழ் வழங்க தாமதம் ஏற்படுகிறது. மாணவர்களுடைய கல்வியில் அரசியல் இருக்கக்கூடாது.
ஆளுநர் அரசியல் அமைப்பின் சட்டத்தின்படி நடந்தால் எந்த அரசும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஆளுநர் கொஞ்சம் அதில் இருந்து விலகினால் சண்டை, சச்சரவு என்பது வந்துகொண்டேதான் இருக்கும். பிரதமருக்கும் முதல்வருக்கும் இருக்கக்கூடிய உறவையும், ஆளுநருக்கும், முதல்வருக்கும் இருக்கக்கூடிய உறவையும் நாம் தனித்தனியாகத்தான் பார்க்க வேண்டும். பிரதமர் என்பவர் ஒரு விருந்தினர். அடிக்கடி தமிழகத்திற்கு வருபவர். அப்படி, வரும்போது விருந்தோம்பல் செய்து அனுப்ப வேண்டும். அதனை முதல்வர் சரியாகச் செய்கிரார். ஆளுநர் இங்கு இருக்கக்கூடிய ஒரு நிர்வாகி. ஒரு நிர்வாகியிடம் எங்கே இறங்கிச் செல்ல வேண்டுமோ, அங்கே இறங்கிப் போக வேண்டும். எந்த இடத்தில் நமது உரிமைகளைக் கேட்க வேண்டுமோ, அங்கு நமது உரிமைகளைக் கேட்க வேண்டும். அதை தமிழ்நாடு அரசு மிகவும் சரியாகச் செய்துகொண்டிருக்கிறது” என்றார்.
இதுகுறித்து அவர் பேசிய கருத்துகளைக் கேட்க இந்த வீடியோவைப் பார்க்கவும்.