பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முகநூல்
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படுகின்றன.

PT WEB

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 7 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் மாதத்தில் நிறைவுபெற்ற நிலையில் தேர்வு முடிவுகளை இன்று வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது.

அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட உள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tnresults.nic.in என்ற தளத்திலும், www.dge.tn.gov.in தளத்திலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

இதற்கு மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். மேலும் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியும். அதேவேளையில் மாணவர்கள் வழங்கிய தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்பட உள்ளது.

அரசு மைய மற்றும் கிளை நூலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தகவல் மையங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அமைச்சருக்கு பதிலாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளே தேர்வு முடிவுகளை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.