வேல்முருகன் pt web
தமிழ்நாடு

சென்னை மெட்ரோ அதிகாரியை தாக்கிய வழக்கு - பின்னணி பாடகர் வேல்முருகன் கைது!

சென்னை மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கிய வழக்கில் பின்னணிப் பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.

PT WEB

சென்னை வடபழனி விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதால் அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வளசரவாக்கம் - ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதால் மெட்ரோ ஊழியர்கள் தடுப்பு அமைத்து வாகனங்கள் மாற்றி செல்ல ஒரு வழிப்பாதையாக அமைத்துள்ளனர்.

இப்படி மெட்ரோ ரயில் பணிக்காக சாலை அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்த வளசரவாக்கம் ஆற்காடு சாலை நோக்கி பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் நேற்று முன்தினம் மாலை தனது காரில் வந்துள்ளார். அப்போது எந்த வித முன்னறிவிப்புமின்றி சாலையை மூடி வேலை செய்வதாக மெட்ரோ பணி ஊழியர்களிடம் பாடகர் வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து கேட்க வந்த மெட்ரோ திட்ட உதவி மேலாளர் வடிவேல் என்பவரை வேல்முருகன் அவதுறான வார்த்தையால் திட்டியும், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த மோதலில் காயமடைந்த வடிவேல் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் வீடு திரும்பினார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து மெட்ரோ திட்ட அதிகாரி வடிவேல் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பின்னணிப் பாடகர் வேல்முருகன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். குறிப்பாக ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அவரை எச்சரித்து, எழுதி வாங்கி காவல்நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

ஏற்கனவே இதேபோன்று, பாடகர் வேல்முருகன் கடந்த மார்ச் மாதம் சென்னை விமான நிலையத்தில் மது போதையில் சென்று பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோல மதுபோதையில் பாடகர் வேல்முருகன் தகராறில் ஈடுபடும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.