தமிழ்நாடு

வனத்தில் வீசியெறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்: துடிதுடித்து உயிரிழக்கும் காட்டுயிர்கள்!

வனத்தில் வீசியெறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்: துடிதுடித்து உயிரிழக்கும் காட்டுயிர்கள்!

webteam

வனப்பகுதியில் வீசியெறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகளால் காட்டுயிர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வனத்தை ஊடுருவி போடப்பட்டுள்ள சாலைகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் வீசியெறியும் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில் கழிவுகளால் இயற்கையான வனச்சூழல் பாழாகி வருவதோடு இதில் வாழும் வன உயிரினங்களும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றன.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து அடர்ந்த வனப்பகுதி வழியே பிரிந்து செல்லும் இரு மலைச்சாலைகள் வழியாகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி மற்றும் கோத்தகிரி போன்ற குளிர்ச்சியான மலை வாசஸ்தலங்களுக்கு சென்று திரும்புகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் இந்த வனச்சாலையில் சுற்றுலா பயணிகளில் சிலர் காட்டுப் பகுதியில் வீசியெறியும் பிளாஸ்டிக் கழிவுகளால் இயற்கை சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

பயணத்தின் போது தாங்கள் எடுத்து வரும் பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட மீதமான திண்பண்டங்கள், காலியான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை வனம் சார்ந்த பகுதிகளில் வீசியெறிந்து செல்கின்றனர். இதனை இப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகள், மான்கள், காட்டெருமைகள், யானைகள் போன்ற விலங்கினங்கள், சிப்ஸ் போன்ற திண்பண்டங்களின் உப்பு சுவைக்காக அவற்றை பிளாஸ்டிக் கவரோடு உட்கொண்டு விடுகின்றன.

இதனால், செரிமானம் ஆகாமல் வயிற்றில் தங்கி கடும் வலி ஏற்படுவதால் விலங்குகள் துடிதுடித்து உயிரிழக்கின்றனர். சமீப காலமாக இறந்து கிடக்கும் யானை, மான் உள்ளிட்ட விலங்குகளின் உடற்கூறு ஆய்வின் போது அவற்றின் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சிலர் கும்பலாக சாலையோரம் உள்ள தடை செய்யப்பட்ட காட்டிற்குள் சென்று மது அருந்துவதோடு காலியான கண்ணாடி மது பாட்டில்களை வனத்திற்குள் வீசி செல்கின்றனர்.

இந்த கண்ணாடி மது பாட்டில்களை அறியாமல் மிதித்துவிடும் யானைகள் படும் வேதனை சொல்லில் அடங்காது. தரையில் வாழும் மிகப்பெரிய பேருயிரான யானைகளின் கால் பாதத்தில் கண்ணாடி துண்டுகள் புகுந்து தொடர்ந்த நடக்க இயலாமல் சாய்ந்து பல நாட்கள் வலியாலும், பசியாலும், தாகத்தாலும் அங்கேயே கிடந்தது உயிரிழந்து விடுகின்றன. இப்படி மனிதர்களின் அலட்சியத்தாலும் அறியாமையாலும் விலங்கினங்கள் மரணிப்பது தொடர் கதையாகி வருகிறது.

மேலும் கூடுதல் ஆபத்தாக காலாவதியான மருத்துவ பொருட்கள், மாத்திரைகள் போன்றவையும் இங்கு கொட்டப்பட்டு வருவது இயற்கை நல ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவை காட்டுயிர்களின் உயிருக்கு உலை வைப்பவை என வேதனை தெரிவிக்கின்றனர். காடுகளுக்குள் சேரும் இது போன்ற பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணுக்குள் புதைந்து மழைநீரை பூமிக்குள் செல்ல அனுமதிக்காமல் வனங்களின் பசுமையே சிதைந்து வருகிறது.

வனத்தின் ஊடே செல்லும் உதகை சாலை, கோத்தகிரி சாலை என வனத்துறை சோதனை சாவடிகள் உள்ளன. இங்கு கடந்து செல்லும் சுற்றுலா வாகனங்களில் சோதனையிட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யவும், வனம் சார்ந்த பகுதிகளில் மது அருந்துவோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் வனத் துறையினருக்கு வனச் சட்டப்படி அதிகாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என இயற்கை நல ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் காயம்படும் புலி, சிறுத்தை, யானை போன்ற விலங்கினங்கள் காட்டுக்குள் இரைதேட இயலாமல் தனது உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக ஊருக்குள் நுழையும் ஆபத்தும் அதிகரித்து வருகிறது என்கின்றனர். இதையடுத்து 'தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை திரட்டி வனச் சாலையோரம் உள்ள பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அவ்வப்போது அகற்றினாலும் மீண்டும் மீண்டும் வீசப்படுவதால் பலனளிப்பதில்லை' என்கின்றனர். இந்த விவகாரத்தில் வனத்துறை தீவிர கவனம் செலுத்தி கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாழாகி வரும் இப்பகுதி வனச்சூழலை காக்க இயலும் என வலியுறுத்துகின்றனர்.

மக்கள் வசிக்கும் நகர பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பிலும், கிராமப்புறங்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பிலும் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வனப்பகுதியில் வீசப்படும் கழிவுகளுக்கு வனத் துறையினரே பொறுப்பேற்க வேண்டும். புலி, சிறுத்தை, கரடி, யானை, கழுதைப்புலி, செந்நாய், காட்டெருது, மான் என எண்ணற்ற காட்டுயிர்களின் வாழ்விடமாக திகழும் மேட்டுப்பாளையம் வனப்பகுதியை காக்க இனியேனும் களம் இறங்குமா வனத்துறை என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேட்டுப்பாளையம் செய்தியாளர் இரா.சரவணபாபு