தமிழ்நாடு

ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க திட்டமா? - தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு

ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க திட்டமா? - தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு

webteam

சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளதை தொழிற்சங்கத்தினர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக இயக்கப்படும் 625 வழித்தடங்களில் 3436 பேருந்துகள் மூலமாக ஒரு நாளைக்கு 29.50 லட்சம் மக்கள் பயணிக்கின்றனர். சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைப்பதில் மாநகர போக்குவரத்துக் கழகம் முக்கிய பங்காற்றி வருகிறது. அதேபோல் மெட்ரோ சேவையை இணைப்பதிலும் முதன்மையாக இருக்கிறது.

இந்நிலையில், இந்த மாநகர பேருந்து சேவைக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டு இருக்கிறது. Gross Cost Contrac மூலம் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க திட்டமிட்டு இருக்கின்றனர். இதை தொழிற்சாங்க நிர்வாகிகள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

ஏற்கனவே, நஷ்டத்தில் இயங்கிவரும் போக்குவரத்துக் கழகத்திற்கு தனியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. அரசு அறிவித்து இருக்கும் இந்த திட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் பயணம் மற்றும் பெண்கள் கட்டணமில்லா பயணம் போன்றவை கேள்விக் குறியாகும். எனவே இந்த நடைமுறையை கைவிட வேண்டும் என சி.ஐ.டி.யூ மற்றும் எச்.எம்.எஸ், அண்ணா தொழிற்சங்கம் போன்றவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மாநகர பேருந்து, மெட்ரோ பயணத்தை ஒன்றாக இணைக்கும் கட்டணம் நடைமுறையை திட்டமிட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. அதேபோல் மாநகர பேருந்து சேவை குறைபாடு இருந்தால் போக்குவரத்துக் கழகம் உடனடி பொறுப்பேற்கும். ஆனால், இந்த சேவையில் பயணிகளுக்கு நடைமுறை சிக்கலும், ஊழியர்களுக்கும் சிரமமும் ஏற்படும் என்கின்றனர். எனவே பேருந்துகளை தமிழக அரசே இயக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.