தமிழ்நாடு

“நித்தியானந்தா என்னை ஆசிரமத்தில் அடைக்கவில்லை” - பிராணாசாமி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்

“நித்தியானந்தா என்னை ஆசிரமத்தில் அடைக்கவில்லை” - பிராணாசாமி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்

webteam

நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்பட்ட பிராணாசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஈரோட்டைச் சேர்ந்த பல் மருத்துவர் முருகானந்தம் கடந்த 2003ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்திற்கு சென்றார். அங்கேயே நிரந்தரமாக தங்கிய அவருக்கு, ‘பிராணாசாமி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் பல நாட்களுக்கு முன்னர் பிடதி ஆசிரமத்தில் இருக்கும் நித்தியானந்தாவின் சீடர்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவலை அறிந்த முருகானந்தத்தின் தயார் அங்கம்மாள், தனது மகனை சந்திக்க பிடதி ஆசிரம் சென்றிருக்கிறார். ஆனால் அவர் அங்கே அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் தனது மகன் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவரை உடனே மீட்டுத்தர வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அங்கம்மாள் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிராணாசாமி எனப் பெயர் மாற்றம் செய்துள்ள முருகானந்தத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிராணாசாமி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் பேசிய அவர், சொந்த விருப்பத்தின்படி ஆசிரமத்தில் தங்கியிருப்பதாகவும், சட்டவிரோதமாக தன்னை அடைத்து வைக்கவில்லை எனவும் நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தார்.
பிராணாசாமியின் விளக்கத்தை ஏற்ற, நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன், அங்கம்மாள் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.