பில்லூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானியாற்றில் உள்ள கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கேரள காடுகளை சுற்றியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது பில்லூர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் நூறு அடியாகும். பவானியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தப் பில்லூர் அணை நீரை ஆதாரமாக கொண்டே கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் தண்ணீர் தேவைக்காக பதினைந்திற்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதன் காரணமாக அணைக்கான நீர்வரத்து திடீரென உயரத்துவங்கியது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு இருபதாயிரம் கனஅடியாக அதிகரித்த நிலையில் இன்று அதிகாலை அணையின் நீர்மட்ட உயரம் 97.5 அடியை தொட்டது.
அதே நேரத்தில் அணையின் நீர்வரத்து இருபது ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அணையின் நான்கு மதகுகள் வழியே வினாடிக்கு 26,000 கனஅடி நீர் அப்படியே உபரி நீராக பவானியாற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுக்காப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தபட்டுள்ளது. மேலும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துவைக்கவோ, பார்சல் ஓட்டவோ கூடாது என தெரிவிக்கபட்டுள்ளது.