தமிழ்நாடு

‘மதுக்கடைகள் வேண்டாமென மீனவர்கள் உறுதிமொழி’ - டாஸ்மாக் கடைக்கு எதிராக மனு

‘மதுக்கடைகள் வேண்டாமென மீனவர்கள் உறுதிமொழி’ - டாஸ்மாக் கடைக்கு எதிராக மனு

webteam

ராமேஸ்வரத்திற்கு உட்பட்ட சின்னப்பள்ளம், மொட்டையன் பண்ணை, அன்னை நகர், தரவை தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த அந்தோணி ராயப்பன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ராமேஸ்வரத்திற்கு உட்பட்ட சின்னப்பள்ளம், மொட்டையன் பண்ணை, அன்னை நகர், தரவை தோப்பு, குந்தக்கல், அண்ணாநகர், பிரான்சிஸ்நகர் ஆகிய பகுதிகளில் அரசு மதுபான கடையை நிறுவ திட்டமிட்டுள்ளது.  மீனவ கிராமங்களான இந்தப் பகுதியில் மீனவர்கள் மது அருந்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துள்ளனர். 

ஏற்கனவே டாஸ்மாக் கடைகள் இருக்கும் நிலையில், தற்போது புதிதாக பல கடைகளை நிறுவ முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மீனவ கிராமங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன. பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி 3 டாஸ்மாக் கடைகள் அங்கு திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளுக்கென்று வகுத்துள்ள விதியை மீறி இந்த கடைகள் திறக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த டாஸ்மாக் கடைகள் பள்ளி மற்றும் வழிபாடு தலங்களுக்கு அருகே நிறுவப்பட்டுள்ளது. அவற்றை மூட கோரி  மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே டாஸ்மாக் கடை அமைப்பதற்கான விதி மீறியுள்ள கடைகளை மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்தப் பகுதிகளில் அரசு மதுகடைகளை திறக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம்,தாரணி கொண்ட அமர்வு, இது குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.