தமிழ்நாடு

''சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமே அந்த டாஸ்மாக்தான்'' - கொந்தளிக்கும் கிராம மக்கள்!

''சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமே அந்த டாஸ்மாக்தான்'' - கொந்தளிக்கும் கிராம மக்கள்!

webteam

மிகப்பெரிய போராட்டத்துக்கு பிறகு டாஸ்மாக் அகற்றப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளுக்கு பின் அதே இடத்தில் மீண்டும் டாஸ்மாக் அமைக்கப்பட்டதற்கு கிராம மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராபுரம் அருகேயுள்ளது பிச்சம்பட்டி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிச்சம்பட்டி பகுதியில் டாஸ்மாக் ஒன்று செயல்பட்டு வந்தது.  அந்த மதுக்கடையால் அப்பகுதி பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட  நிலையில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு டாஸ்மாக் அருகே படுகொலை செய்யப்பட்டார்.

தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியின் உயிரிழப்புக்கு டாஸ்மாக்தான் காரணம் எனக்கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை அடுத்து அப்பகுதியில் இருந்த டாஸ்மாக் அகற்றப்பட்டது.

இதற்கிடையே மீண்டும் அதேபகுதியில் டாஸ்மாக் திறக்க அரசு முயற்சி எடுத்ததாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கிராம மக்கள், டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இந்நிலையில்,  பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, டாஸ்மாக் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்த பொதுமக்கள் அந்த டாஸ்மாக் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து டாஸ்மாக் செயல்பட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.