தமிழ்நாடு

கைவிட்ட மருமகன்... பேரக்குழந்தைகளை காக்க வீடின்றி போராடும் மாற்றுத்திறனாளி தாத்தா - பாட்டி

கைவிட்ட மருமகன்... பேரக்குழந்தைகளை காக்க வீடின்றி போராடும் மாற்றுத்திறனாளி தாத்தா - பாட்டி

நிவேதா ஜெகராஜா

கடலூரில் மகளை இழந்து, மதுவுக்கு அடிமையான மருமகனால் வேதனையுற்று வயதான தம்பதியரொருவர், தங்கள் பேரக் குழந்தைகளை காப்பாற்ற தவித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டுசாலை பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் வசிப்பவர் மாற்றுத்திறனாளியான செல்வராஜ். இவரது மனைவி சரோஜா. வயதானவர்களான இவர்கள் இருவரும் தங்களின் மகள் வழி பேரன்கள் இருவரை வைத்துக்கொண்டு தவித்து வருகிறார்கள்.

செல்வராஜின் மகள், கணவனின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மனைவி மறைவுக்குப் பின் மதுவுக்கு மேலும் அடிமையாகியுள்ளார் அவர். அவரை நம்பி குழந்தைகளை விடமுடியாமல், இரண்டு பேரக்குழந்தைகளும் தங்களது வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார்கள் இருவரும்.

இவர்களில் செல்வராஜ் மாற்றுத்திறனாளி என்பதால், அவருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை மாதம் 1000 ரூபாய் மட்டும் வருகிறது. செல்வராஜின் மனைவி வீட்டு வேலை செய்து வருகின்றார். இந்த வருமானத்தை வைத்தே, இவர்கள் இரண்டு பேரக்குழந்தைகளும் வளர்க்கிறார்கள்.

இந்நிலையில் அவர்கள் வசித்து வரும் அரசின் தொகுப்பு வீட்டில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. வீட்டின் ஆயுள் காலம் முடிந்து விட்டதால் அவர்கள் வெளியேற வேண்டும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு புதிதாக வீடு கட்டித் தரப்போவதாக வீட்டுவசதி வாரியம் அறிவுறுத்தியிருந்துள்ளது. அந்த இடைப்பட்ட காலத்தில், வெளியே எங்காவது வெளி இடத்தில் தங்குங்கள் என்றும், அதற்காக மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்றும் வீட்டு வசதி வாரியம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. வீடு கட்டி முடித்த பிறகு உங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் மாற்றுத்திறனாளியான செல்வராஜ் தனது இரண்டு பேரக்குழந்தைகளும் மூன்று சக்கர சைக்கிளில் வைத்துக் கொண்டு வீடு தேடி அலைகிறார். ஆனால் குறைந்த வாடகைக்கு எங்குமே வீடு கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கிறார் அவர். தனக்கு மாதம் மாற்றுத்திறனாளி உதவித்தொகை ஆயிரம் மட்டுமே வருகிறது; தனது மனைவிக்கு கூலி வேலை செய்வதால் நிரந்தர ஊதியம் கிடையாது என்பதால் இதனால் எங்கு சென்று தங்குவது என கண்ணீருடன் தெரிவிக்கும் அவர், அரசு தங்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கிறார்.

அந்த தொகுப்பு வீட்டில் வசிப்பவர்கள் பலர் காலி செய்து விட்டு வாடகை வீட்டுக்கு சென்று விட்டார்கள். அவளுக்கு குறைந்த அளவு வருவாய் வந்தால்கூட, ஓரளவு சமாளிக்கும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் வயதான இந்த தம்பதிகள் பேரக் குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணீரோடு நிற்கிறார்கள்.