தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நாளை முதல் உடல்தகுதிச் சான்று...!

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நாளை முதல் உடல்தகுதிச் சான்று...!

Rasus

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கான உடற்தகுதிச் சான்று நாளை முதல் வழங்கப்படவுள்ளது.

2019-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் இன்று நடைபெற்றது. இதில் அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். சீறிவந்த காளைகளை அடக்க முயன்றபோது 10 பேர் காயமடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில்,‌ பணப் பரிசுகள், தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கான உடற்தகுதிச் சான்று நாளை முதல் வழங்கப்படவுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள தகுதியான வகையில் காளைகளின் உயரம், உடற்திறன் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து பின்னர் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும் என கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.

நாளை முதல் வரும் 12 ம் தேதி வரை அந்தந்த பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கால்நடைகளுக்கு தகுதிச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக்கொள்ளும் காளையின் உயரம் 120 சென்டி மீட்டருக்கு அதிகமாக இருக்க வேண்டும். மேலும், காளைகள் 2 வயது முதல் 8 வயது கொண்டவையாகவும் இருக்க வேண்டும், உடல்தகுதிச் சான்று பெற வரும் காளை உரிமையாளர்கள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் காளை வளர்ப்பவரின் புகைப்படம் உள்ளிட்டவற்றை கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதிச்சான்று இருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் கலந்துகொள்வதற்கான பதிவு டோக்கன் வழங்கப்படும்.