உடற்கல்வி ஆசிரியர் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கை கடிகாரத்தை திருடியதாக பள்ளி மாணவியை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது!

ஆசிரியையின் கை கடிகாரத்தை திருடியதாக மாணவியை பொது இடத்தில் வைத்து பலர் முன்னிலையில் தாக்கிய வாலிபால் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.

PT WEB

செய்தியாளர்: ஜெகன்நாத்

ஆசிரியையின் கை கடிகாரத்தை திருடியதாக மாணவியை பொது இடத்தில் வைத்து பலர் முன்னிலையில் தாக்கிய வாலிபால் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 23-ஆம் தேதி மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் நடந்தன. மாவட்டம் முழுவதும் ஏராளமான மாணவிகள் இதில் பங்கு பெற்றனர். போட்டியில், ஓசூர் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். அந்த நேரத்தில் அந்த தனியார் பள்ளி ஆசிரியரின் கை கடிகாரத்தை திருடியதாக ஆசிரியை ஒருவர் மாணவியையும், அவரது பயிற்சியாளரையும் கடுமையாக திட்டியுள்ளார்.

புதிய கடிகாரம் வாங்கித் தருவதாக பயிற்சியாளர் கூறியும் அந்த ஆசிரியை சமாதானமடையவில்லை. தொடர்ந்து மாணவியை ஆசிரியை திட்டிய நிலையில், சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோரிடம் பயிற்சியாளர் தியாகராஜன் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மாணவியை பயிற்சியாளர் தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின. மைதானத்தில் கீழே கிடந்த கை கடிகாரத்தை மாணவி எடுத்து வந்ததாக கூறப்படும் நிலையில், மாணவியின் பெற்றோர் கூறியதாலேயே மாணவியை தாம் அடித்ததாக பயிற்சியாளர் விளக்கம் அளித்தார்.

மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு கேட்டபோது மாணவி தவறு செய்ததால் அடிக்க சொன்னதாகவும் அதனால் அடித்ததாகவும் கூறினர்.

சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், உடற்பயிற்சி கல்வி ஆசிரியர் தியாகராஜனை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பாகலூர் காவல்துறையினர் தியாகராஜனை கைது செய்து, அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம், தாக்குதல் உள்பட மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.