தமிழ்நாடு

இன்று தொடங்க இருந்த கீழடி அகழாய்வுப் பணி திடீர் ஒத்திவைப்பு

இன்று தொடங்க இருந்த கீழடி அகழாய்வுப் பணி திடீர் ஒத்திவைப்பு

webteam

கீழடியில் இன்று தொடங்குவதாக இருந்த அகழாய்வுப் பணி திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடி கிராமம், பண்டைய தமிழர்களின் வசிப்பிடமாகக் கண்டறியப்பட்டு 2013-ஆம் ஆண்டு முதல் அகழாய்வு நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக நடந்த  அகழாய்வில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண்பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. இரண்டு கட்ட ஆய்வுகளுக்குப்பின் அதை நடத்தி வந்த தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டார். இதனையடுத்து மூன்றாம் கட்ட அகழாய்வை தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் மேற்கொண்டார்.

மூன்று கட்டங்களுடன் மத்திய தொல்லியல்துறை தனது ஆய்வை முடித்துக் கொண்டது. கீழடியில் ஆய்வு தொடர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதால் 4ஆம் கட்ட அகழாய்வை தமிழக அரசே மேற்கொண்டது. கீழடியில் இதுவரை 14 ஆயிரத்து 500 அரும்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பாதுகாக்க அகழ் வைப்பகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள ரூ.57 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 5ம் கட்டப்பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஜூன் 12 ஆம் தேதி  அகழாய்வுப் பணி தொடங்கும் என தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று தொடங்கப்படவிருந்த 5ஆம் கட்ட அகழாய்வுப்பணி திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.