தமிழ்நாடு

கோவையில் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: போலீசார் விசாரணை

கோவையில் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: போலீசார் விசாரணை

webteam

கோவையில் பள்ளிவாசல் மீது நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களால் வீசப்பட்ட பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கணபதி ரூட்ஸ் கம்பெனி எதிரில் உள்ள வேதம் பால் நகர் பள்ளிவாசலில் இரவு காவல் பணியில் முதியவர்கள் இருவர் இருந்தனர். பள்ளிவாசல் உள்ளே இருவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒருவர் கழிவறை செல்வதற்காக அதிகாலை வெளியே வந்துள்ளார். அப்போது பெட்ரோல் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை கவனித்தபோது இந்த துர்நாற்றம் பள்ளிவாசல், கதவருகே திரியுடன் கிடந்த உடைந்த பாட்டிலில் இருந்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் பீர் பாட்டிலில் திரி வைத்து வீசி உள்ளதும், திரி சரியாக பற்றாததால் பெட்ரோல் வெடிகுண்டு வெடிக்காததும் தெரியவந்தது.

பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா கடந்த ஒரு மாதமாக பழுதடைந்து இருந்துள்ளது. இதனால் இந்த சம்பவம் தொடர்பான எந்த காட்சிப் பதிவுகளும் கிடைக்கவில்லை. இதனால் வெவ்வேறு கோணங்களில் சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.