தமிழ்நாடு

வெளிநாட்டு தம்பதிக்கு குழந்தையை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

webteam

பெண் குழந்தையை வெளிநாட்டு தம்பதிக்கு விற்பனை செய்த அனைவரின் மீதும் முழு விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் விஸ்வராஜ் புகார் மனு அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்த செவிலியர் அமுதா உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான விஸ்வராஜ் என்பவர், இராசிபுரம் அனைத்து காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

அந்த புகார் மனுவில், “இலங்கை கொழும்புவைச் சேர்ந்த தம்பதியினர், கடந்த 2014ம் ஆண்டு திருச்சி விமானநிலையம் வந்து 20 நாட்கள் தங்கியுள்ளனர். பின்னர் தாராபுரம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்ததாக பதிவு செய்து பிறப்பு சான்றிதழுடன் கோவை விமான நிலையத்திலிருந்து கொழும்பு சென்றுள்ளனர். ஆனால் அந்த குழந்தை சேலம் நாழிக்கல்பட்டியை சேர்ந்த ஒரு தம்பியினருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை.

அதனை ராசிபுரம் புரோக்கர் அமுதா மூலம் ஈரோடு பகுதியை சேர்ந்த கோமதி மற்றும் யுவராஜ் என்பவரிடம் விற்றுள்ளனர். எனவே குழந்தையை விற்பனை செய்தவர்கள், அதில் புரோக்கர்களாக செயல்பட்டவர்கள் என்று அனைவரின் மீது விசாரணை நடத்திட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் முழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரியும் தனக்கு கிடைத்த ஆதாரத்துடன் விஸ்வராஜ் அந்த புகார் மனுவை அளித்துள்ளார்.