தமிழ்நாடு

புத்தாண்டு அன்று நள்ளிரவில் கோயில்களை திறக்க தடைக் கோரி மனு

webteam

ஆங்கில புத்தாண்டு தினத்திற்காக டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் கோயில்களைத் திறந்து வைக்கத் தடை விதிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அஸ்வத்தாமன் என்ற வழக்கறிஞர் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ஆகம விதிகளின்படி, இரவு 9 மணிக்குள் அர்த்த ஜாம பூஜையை முடித்து நடையை அடைத்துவிட்டு, காலை 4.30 முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் கோயில் நடையை திறக்க வேண்டும் என்பதே‌ முறை எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும், சைவக் கோயில்கள் சிவ ராத்திரிக்கும், வைணவக் கோயில்கள் வைகுண்ட ஏகாதசிக்கும் மட்டுமே நள்ளிரவில் திறந்திருக்க வேண்டும் என ஆகம முறைகள் வகுக்கப்பட்டுள்ளதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இரவு நேரங்களில் காற்றில் பிராண வாயுவின் அளவுக் குறைவாக இருக்கும் என்பதால் மூதாதையர்கள் இந்த நடைமுறையை பின்பற்றி வந்ததாகவும் அதில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு கிறிஸ்துமஸ் விடுமுறை கால அமர்வில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.