Kamal haasan pt desk
தமிழ்நாடு

இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிட தடை கோரி நீதிமன்றத்தில் மனு – பின்னணி என்ன?

webteam

செய்தியாளர்: மணிகண்டபிரபு

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், படத்திற்கான புரோமோஷன் வேலைகளை படக்குழுவினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை ஹெச்எம்எஸ் காலனி பகுதியை சேர்ந்த மஞ்சவர்மக் கலை, தற்காப்பு கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

Indian 2

அந்த மனுவில், லைகா புரடெக்சன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தியன் படத்தின் முதலாம் பாகத்தை தயாரித்த போது கமல்ஹாசன் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து தன்னிடம் ஆலோசித்து அந்த முத்திரை பயன்படுத்தப்பட்டது.

அதற்காக தனது பெயரும் படத்தில் இடம் பெற்றது. ஆனால், தற்போது, இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. அதில் கமல்ஹாசன் முதலாம் பாகத்தின் வர்மக்கலை முத்திரையை பயன்படுத்தி உள்ளனர். ஆனால் எங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.

எனவே படத்தை எந்த தளம் வாயிலாகவும் வெளியிடக்கூடாது, குறிப்பாக திரையரங்குகள் அல்லது ஓடிடி பிளாட் ஃபாம்கள் என படத்தை வெளியிட நிரந்தர தடை விதிக்க உத்தரவிடக்கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு உகந்ததாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து வருகிற 9 ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது.