தமிழ்நாடு

‘இருமல்’ காலர் ட்யூனை தடை செய்யுங்கள்' : உயர்நீதிமன்றத்தில் மனு

webteam

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இருமல் சத்தத்துடன் கூடிய காலர் ட்யூனை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அமைச்சகங்கள் தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அதிவிரைவு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தியர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு ஆட்டோமேட்டிக் காலர் ட்யூன் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, அனைவரது செல்போன் அழைப்புகளின் போதும் இருமல் சத்தத்துடன் கூடிய விழிப்புணர்வு அறிவிப்புக் குரல் ஆங்கிலத்தில் கேட்கும்.

இந்நிலையில், இருமல் சத்தத்துடன் கூடிய இந்த காலர் ட்யூனை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜசேகரன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இதுபோன்ற விழிப்புணர்வு விளம்பரத்தால் ஆரோக்கியமான நபரும் உடல்நலக்குறைவு ஏற்படும் மனநிலைக்கு தள்ளப்படுவதாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் காலர் ட்யூன் எரிச்சல் ஊட்டும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறுஞ்செய்தி, வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரையரங்குகள் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல வழிகள் இருக்கும்போது, இருமலுடன் தொடங்கும் காலர் ட்யூன் மக்களின் அமைதியான வாழ்வுரிமையைப் பறிக்கும் வகையில் இருப்பதாகவும் மனு கூறப்பட்டுள்ளது.