திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பூரை சேர்ந்தவர் சரவணன்(வயது 39). இவர் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கொண்டம நாயக்கனூர் அரசு பள்ளியில் தொகுப்பூதியத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் முன்னால் உள்ள பாதையில், மழை நீர் தேங்கி பள்ளமாக இருந்ததால், யாரும் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக கற்களை போட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று மது போதையில் இருந்த இருவர், காரில் அந்த வழியே சென்றுள்ளனர். அப்போது ஏன் பாதையில் கற்களைக் கொட்டி இருக்கிறீர்கள் என்று கேட்டு சரவணனிடம் தகராறு செய்துள்ளனர். இதற்கு, சரவணனோ பாதையில் பள்ளமாக இருந்ததால் கற்களை போட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த போதை நபர்கள் சரவணனை தாக்கியுள்ளனர். அப்போது இரண்டு தரப்பினரும் கட்டிப்பிடித்து சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை விலக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில், அன்றைய தினம் மாலை ஒரு காரில் சரவணனின் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த டிவி, ஃபேன், பீரோ, சேர் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளனர். அப்போது அவர்களை தடுத்த சரவணன் மீது அவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதில் சரவணன், வீட்டில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார். அதனைத்தொடர்ந்து சரவணனின் மனைவி சுமித்ரா தனது உறவினர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த சரவணனின் உறவினர்கள், அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சரவணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடிபோதையில் இருந்த மர்ப நபர்கள் வீட்டிற்குள் புகுந்து உடற்கல்வி ஆசிரியரை கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.