நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 4-ஆம் தேதி துவங்கியது. இந்நிலையில் இதன் 5-ஆம் நாளான நேற்று அக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி முகமது அப்துல்லா, விட்டிலிகோ ஹைப்பர் பிக்மென்டேஷன் எனப்படும் தோல் நிறமி குறைபாடுகளால் ஏற்படும் வெள்ளைத் தழும்புகள் உள்ளவர்களை இந்திய இராணுவத்தில் பணியமர்த்திட பரிசீலிக்க வேண்டி நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து உரைநிகழ்த்தினார்.
அப்போது பேசிய அவர்” உலக மக்கள் தொகையில் 1-லிருந்து 4 சதவீத மக்கள் தோல் நிறமி குறைபாட்டு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். விட்டிலிகோ நோய் குறைபாடு எனப்படும் தோல் நிறமி குறைபாடு உள்ளவர்களை ராணுவத்தில் பணியாற்ற அனுமதியுங்கள். இது தொற்றக்கூடிய நோய் இல்லை. இத்தகையவர்களை ராணுவத்தில் பணியாற்றிட அனுமதிப்பதில்லை. எனவே இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்திய இராணுவத்தில் பணியாற்றிட தேவையான நடவடிக்கையை எடுக்க பரிசீலனை செய்ய வேண்டும்” என்று பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதனை தனது x வலைதளபக்கத்தில் பதிவிட்டிருந்தார் திமுக எம்.பி முகமது அப்துல்லா