தமிழ்நாடு

சூதாடியபோது வந்த போலீஸ்: பயத்தில் கூவம் ஆற்றில் குதித்த நபர் பலி

சூதாடியபோது வந்த போலீஸ்: பயத்தில் கூவம் ஆற்றில் குதித்த நபர் பலி

kaleelrahman

சென்னையில் சுடுகாட்டில் சூதாடியபோது போலீசார் வருவதைப் பார்த்து தப்பிக்க ஓடி, ஆற்றில் குதித்த நபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம், சோராஞ்சேரி, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சரவணன் (46). இவரது மனைவி சத்தியவாணி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சரவணன் தனது நண்பர்களுடன் சுடுகாட்டில் சீட்டு விளையாடியுள்ளார். இது குறித்து பட்டாபிராம் போலீசாருக்கு ரகசிய தகவல் சென்று உள்ளது. இதனை அடுத்து சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், ரோந்து வாகனத்தில் அங்கு வந்துள்ளனர்.

இதைப்பார்த்து பயந்து போன சரவணன் உள்ளிட்ட நண்பர்கள் அங்கிருந்து ஓடி உள்ளனர். இதில், சரவணன் உள்ளிட்ட இருவர் சுடுகாட்டு அருகில் உள்ள கூவம் ஆற்றில் குதித்துள்ளார். இதில், சரவணன் ஆற்றில் உள்ள செடி கொடிகளில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதனைப் பார்த்த அவரது நண்பர் ஜெகன், கிராமத்தில் உள்ள உறவினர்கள், பொதுமக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, பொதுமக்கள் ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் வீரர்கள் படகு மூலம் ஆற்றில் இறங்கி சரவணனை தேடினர். மேலும், தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேரத்திற்கு மேலாக தேடி சரவணனின் உடலை மீட்டனர். உடலை மீட்ட உடன் சரவணனின் உறவினர்கள் உடலை அவரது வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டுமென போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்த புகாரின் அடிப்படையில் பட்டாபிராம் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.