மதுரை உயர்நீதிமன்றம் pt web
தமிழ்நாடு

“கொலையும் செய்துவிட்டு பாதுகாப்பும் கேட்பார்களா?; இதான் நீதிமன்றத்தின் வேலையா”-நீதிபதி சரமாரி கேள்வி

“கொலையும் செய்வார்கள் பாதுகாப்பும் கேட்பார்கள். இதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது. கொலை செய்யும் நபர்களை காப்பாற்றுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை” உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி

PT WEB

பல்வேறு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கபட்டுள்ள மதுரை மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் தனக்கு தனி போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பவுன்சர்களை போட்டு தன்னை தானே பாதுகாத்து கொள்ள வேண்டியது தான் என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான் பட்டியைச் சேர்ந்தவர் அறிவழகன் என்ற வினித். இவர் காரைக்குடி போலீஸ் நிலையத்திற்கு ஜாமீன் கையெழுத்து போட சென்றபோது ஒரு கும்பல் அறிவழகனை பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கில் ஆதி நாராயணன் என்பவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் கைதாகி அவர் ஜாமீனில் தற்போது வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதால் தனி போலீஸ் பாதுகாப்பு வழங்க கேட்டு மதுரை ஐகோர்ட்டில் ஆதிநாராயணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் மீது எத்தனை கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, 12க்கும் மேற்பட்ட வழக்குகள் 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன என தெரிவித்தார். அதற்கு நீதிபதி, மனுதாரர் கொலை செய்து கொண்டே இருப்பார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.

கொலையும் செய்வார்கள் பாதுகாப்பும் கேட்பார்கள். இதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது. கொலை செய்யும் நபர்களை காப்பாற்றுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை. அச்சமின்றி கொலை செய்யும் நபர் தன்னை தானே பாதுகாத்து கொள்ள வேண்டியது தானே?

தன் கையே தனக்கு உதவி என்பது போல அவரை அவர் தான் காப்பாற்றி கொள்ள வேண்டும். கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றம் எவ்வாறு பாதுகாப்பு தர முடியும். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதை போல அவரை அவராக காப்பாற்றி கொள்ளட்டும். வேண்டுமென்றால் ஹாலிவுட் பாலிவுட் படத்தில் வருவது போல பவுன்சர்களை போட்டு தன்னைத் தானே பாதுகாத்து கொள்ளட்டும். இந்த வழக்கில் மனுதாரர் கோரிக்கையை ஏற்புடையதல்ல. இதில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்” என நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து ஆதிநாராயணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மனுவை நாங்கள் திரும்ப பெற்றுக் கொள்கிறோம் எந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் என வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.