கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலங்களான தூண் பாறை, குணா குகை அடங்கிய பகுதிகளை அக்டோபர் மாதம் முதல் திறக்க வனத்துறையினர் பரிசீலனை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு இபாஸ் பெற்றுக்கொண்டு வர கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அரசு அனுமதி அளித்தது. அதே நாளில் பிரயண்ட் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் செட்டியார் பூங்காக்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதித்தது. அதனைத்தொடர்ந்து வெள்ளி நீர்வீழ்ச்சி பூங்கா மற்றும் கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட அரசு அனுமதித்தது.
இப்பகுதிகள் தோட்டக்கலை மற்றும் நகராட்சி வசம் உள்ள பகுதிகளாக இருந்த நிலையில், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை மற்றும் தூண் பாறை அடங்கிய 12 மைல் சுற்றுலா தலங்களை அக்டோபர் மாதம் முதல் திறக்க வனத்துறை பரிசீலனை செய்து வருவதாக, வனத்துறையின் ஒருங்கிணைந்த சுற்றுலா தலங்களுக்கான வனச்சரகர், கிருஷ்ண சாமி தெரிவித்துள்ளார்.
அதற்கான அறிவிப்பு மாவட்ட ஆட்சியருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் சுற்றுலா சார் தொழிலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.