தமிழ்நாடு

'பெரியார் வெறும் சிலை அல்ல; அவர் ஒரு தத்துவம்'-மாணவர்கள் மத்தியில் நடிகர் சத்யராஜ் பேச்சு!

webteam

''என்னம்மா கண்ணு செளக்கியமா என கேட்டால், ஆமாம்மா கண்ணு செளக்கியம் தான் என, பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், பெண்களும் கூற முடிகிறதென்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார்'' எனப் பேசினார் நடிகர் சத்யராஜ்.

திருச்சியில் உள்ள தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தந்தை பெரியார் 144 வது பிறந்த நாள் விழா, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 20 ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் முன்னாள் மாணவர்கள் சங்க புரவலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேசுகையில், ''இன்று நீங்களும், நானும் இந்த இடத்தில் நிற்பதற்கு காரணம் தந்தை பெரியார். இங்கு இருக்க கூடிய ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளும் பெரியார் இருக்கின்றார்'' என்றார்.

திருச்சி சிவா பேசுகையில், ''இந்த கல்லூரி கட்ட இடமும், நிதியும் வழங்கியவர் பெரியார். ஆனால் அப்போதைய முதலமைச்சர் பக்தவச்சலம் கலந்து கொண்ட இந்த கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பெரியாருக்கு மேடையில் இடம் ஒதுக்கவில்லை. அவரை மேடைக்கு கீழே அமர வைத்திருந்தார்கள். அதனால் கோபப்பட்ட சிலர் பெரியாரிடம் இது குறித்து கேட்ட போது எனக்கு மேடையில் இடம் ஒதுக்க வேண்டும் என நான் பணம் கொடுக்கவில்லை. நம் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தான் பணம் கொடுத்தேன் என்றார். படிக்க முடியாத பலருக்கு இந்த கல்லூரி கல்வி கற்க வாய்ப்பளித்தது. அதனால் பலர் உயர்ந்துள்ளோம். பலரை முதல் தலைமுறை பட்டதாரிகளாக்கியது இந்த கல்லூரி. பெரியார் என்பவர் ஒரு தத்துவம். அவர் நம்முடைய விடிவு.

பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி தான் இந்த கல்லூரிக்கு பெயர். ஆனால் பெரும்பாலான மக்கள் இதை ஈ.வெ.ரா கல்லூரி என தான் கூறினார்கள். அதனால் இந்த கல்லூரி பெயரை தந்தை பெரியார் கல்லூரி என மாற்ற வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அவர் உடனடியாக கல்லூரி பெயரை தந்தை பெரியார் கல்லூரி என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டார்” என்றார்.

இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''என்னம்மா கண்ணு செளக்கியமா என கேட்டால், ஆமாம்மா கண்ணு செளக்கியம் தான் என, பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், பெண்களும் கூற முடிகிறதென்றால் அதற்கு காரணம்  தந்தை பெரியார். நமக்கு கேளிக்கைகளும், பொழுதுபோக்கும் தேவை தான். ஆனால் அதை விட முக்கியம் புரட்சியாளர்கள் குறித்து நாம் தெரிந்து கொள்வது. தன் வாழ்க்கை முழுவதும் சிக்கனமாக இருந்த பெரியார். 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே 5 லட்சம் ரூபாய் பணமும் 28 ஏக்கர் நிலமும் பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் கல்வி கற்க வேண்டும் என இந்த கல்லூரி அமைக்க  வழங்கினார்.

தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன். பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போடுவது, அதை உடைப்பது என சிலர் செய்கிறார்கள். பெரியார் உயிரோடு இருந்திருந்தால் அது குறித்தெல்லாம் கவலைப்படாமல் செருப்பு மாலையை என் சிலைக்கு போடுவதற்கு பதிலாக எனக்கு போடுங்கள் என பெரியார் கூறியிருப்பார். அவர் வெறும் சிலை அல்ல. அவர் ஒரு கோட்பாடு. அவர் ஒரு தத்துவம்.

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பட்ட எந்த துன்பங்களையும் பெரியார் அனுபவிக்கவில்லை. பணக்கார வீட்டு குடும்பத்தில் பிறந்தவர் பெரியார். அவர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தரையில் இறங்கி போராடினார். அவரின் கொள்கை மனிதாபிமானத்தின் உச்சம். மனிதனை பிறப்பால் தாழ்ந்தவன் என கூறி ஒதுக்கி வைத்தார்கள். அவ்வாறு ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடியவர் தான் தந்தை பெரியார் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தந்தை பெரியார் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், இன்னாள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: மத ஒற்றுமையோடு வாழ்வதுதான் திராவிட மாடல் - அமைச்சர் பொன்முடி