தமிழ்நாடு

'பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாள்' : முதல்வரின் அறிவிப்புக்கு பாஜக வரவேற்பு

Veeramani

பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், “ கடவுள் நம்பிக்கையுடன் உள்ள பாஜக இந்த அறிவிப்பை வரவேற்கிறது” என தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் தமது பேச்சில், “இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். பெரியாரின் செயல்கள் குறித்து பேச வேண்டுமென்றால் 10 நாட்கள் அவையை ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும். செப்டம்பர் 17 சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும். யாரும் எழுத தயங்கியதை எழுதியவர்; யாரும் பேச தயங்கியதை பேசியவர் பெரியார்.

பெரியார் நடத்திய போராட்டங்கள் யாராலும் காப்பியடிக்க முடியாதது. தமிழருக்கு எதிரான எல்லாவற்றையும் எதிரியாக கொண்டு செயல்பட்டார் பெரியார். நாடாளுமன்றத்தின்  வாசலுக்கே போகாத பெரியாரால்தான் இந்திய அரசியல் அமைப்பில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய எழுச்சிக்கு பெரியார் போட்ட விதைதான் காரணம். தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் அடையாளமாக சமூக நீதி நாளை கொண்டாடுவோம்” என்று பெரியாருக்கு புகழாரம் சூட்டினார்.