தமிழ்நாடு

பெரியகுளத்தில் கொட்டித் தீர்த்த கனமழை – பேருந்துக்குள் குடைபிடித்தபடி அவதியுற்ற மக்கள்!

webteam

பெரியகுளத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக அரசு பேருந்துகளின் உட்புறம் மழைநீர் ஒழுகுவதால் பயணிகள் பேருந்தில் குடைகளை பிடித்தவாறு பயணம் செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம், ஆண்டிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் 5 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் மழைபெய்யும் நேரத்தில் பேருந்தின் உட்புறம் மழைநீர் ஒழுகுவதால் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மழை நீரில் நனைந்தவாறு பயணம் செய்து அவதிப்பட்டனர்.

இதில், ஒருசில பயணிகள் தாங்கள் கொண்டுவந்திருந்த குடைகளை பிடித்தவாறு பேருந்தில் பயணம் செய்தனர். பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி பகுதியில் இயக்கப்படும் கிராம பேருந்துகளில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மழைநீரில் நனைந்தபடியே வாகனத்தை இயக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

அதிகாரிகள் அரசு பேருந்துகளை முறையாக ஆய்வுசெய்து பேருந்துகளில் மழைநீர் ஒழுகாதவாறு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என பேருந்து பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.