ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரைக்க தமிழக அரசுக்குள்ள அதிகாரத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பது தொடர்பான வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளதாக நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதையடுத்து, அவர்களை விடுக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதனை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. அதில், சட்டப்பிரிவு 435ன் படி சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் தங்கள் ஒப்புதலுடனே 7 பேரை விடுவிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு மீண்டும் பரிந்துரை கடிதம் அனுப்பியது. ஆனால் அக்கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
அதனால், உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள மத்திய அரசின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைக்க பேரறிவாளன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதனால், சட்டப்பிரிவு 161ன்படி 7பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் பரிந்துரைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 7 பேரை விடுவிப்பதில் இனி சட்டச்சிக்கல்கள் இருக்காது என்று பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு கூறுயுள்ளார்.
மேலும் 7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். இனி தமிழக முதல்வர், சட்டத்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் தமது மகனின் விடுதலை சாத்தியமாகுமென நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் ஏழு பேரை விடுவிப்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.