தமிழ்நாடு

உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பேரறிவாளன்

உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பேரறிவாளன்

நிவேதா ஜெகராஜா
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னராக, கடந்த மே மாதம் 28 ஆம் தேதி புழல் சிறையிலிருந்து ஒருமாதகால பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தார் பேரறிவாளன். ‘கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது மகன் பேரறிவாளனுக்கு, சிறைகளில் பரவும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நீண்ட விடுப்பு வழங்கவேண்டும்’ என அவரின் தாய் அற்புதம் அம்மாள் கோரிக்கை வைத்திருந்ததையடுத்து, அவருக்கு மே 28 தேதி முதல் ஒரு மாதகாலம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. பரோல் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார் பேரறிவாளன்.

பரோல் காலம் முடிவடைந்த பின், கடந்த மாத இறுதியில் (ஜூன் 28) பேரறிவாளனுக்கு அவரின் பரோல் காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட பரோல் காரணமாக அவர் தற்போது தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டையிலேயே தங்கியுள்ளார்.

இந்த நேரத்தில் அவருக்கு சமீபத்தில் சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர். மருத்துவர்கள் தொடர்ந்து அவரை பரிசோதனை செய்து வருகின்றனர்.
- ஜோதி நரசிம்மன்