தமிழ்நாடு

ஷட்டரை உடைத்து ரூ.5 கோடி நகை அபேஸ்.. சென்னை பெரம்பூரில் துணிகரம்!

ஷட்டரை உடைத்து ரூ.5 கோடி நகை அபேஸ்.. சென்னை பெரம்பூரில் துணிகரம்!

webteam

பெரம்பூரில் பிரபல நகைக் கடையின் ஷட்டரை வெல்டிங் மூலம் உடைத்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான ஜேஎல் கோல்டு ஹவுஸ் என்ற பெயரில் நகைக் கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து இன்று காலை கடையை திறக்க ஸ்ரீதர் வந்துள்ளார். அப்போது கடையின் ஷட்டர் வெல்டிங் மிஷினால் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்ரீதர் உடனடியாக திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நகைக் கடையில் வைத்திருந்த ஒன்பது கிலோ தங்க நகை மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரக்கல் நகைகள்; கொள்ளையடிக்கப்பட்டதோடு ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் நான்கு உதவி ஆணையர்கள் 9 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் ஒன்பது தனி படைகள் அமைக்கப்பட்டு தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இதனிடையே கடையில் வேலை செய்யும் ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடையை மூடிய 10 மணி நேரத்திற்குள் பரபரப்பாக இயங்கக்கூடிய நகைக் கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.