100 நாள் வேலைத்திட்டத்தில் பெரம்பலூர் கிராம மக்களுக்கு கடந்த இரு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் 100 நாள் வேலைத் திட்டமாக, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் நாடு முழுவதும் 6 கோடிக்கும் மேலான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. இதன்படி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதில், மாநிலங்களுக்கு மாநிலம் ஊதிய உயர்வு வேறுபடுகிறது. 3 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தினசரி ஊதியம் ரூ.294ஆக இருந்தநிலையில், ரூ. 319ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரம்பலூரில் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஐந்தயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர், ஆலத்தூர் வேப்பூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களில் சுமார் 1,94000 அதிகமானோர் 100 நாள் வேலைத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். இதில் காரை , சமத்துவபுரம், புதுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5000ற்கும் அதிகமானோருக்கு 6 வாரங்களுக்கு மேல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று தெரிகிறது. அத்துடன் வேலை நாட்களில் சம்பளம் முழுமையாக ஏற்றப்படவில்லை என்று வருத்தம் தெரிவிக்கிறார்கள். விரைந்து சம்பளம் வழங்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.