பெரம்பலூர் அருகே கோவிலில் அர்ச்சகர் தாக்கியதால் பக்தர் ஒருவருக்கு மண்டை உடைந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தில் வாலிஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் முகூர்த்த நாட்களில் திருமணங்கள் நடக்கும் என்பதால் அந்நாட்களில் வழக்கத்தை விட கூடுதலான பக்தர்கள் கூட்டம் காணப்படும்.
இந்நிலையில், இன்று 15-க்கும் மேற்பபட்ட திருமணங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெரம்பலூர் அருகே ஒகளூரைச் சேர்ந்த ராகவேந்திரன் என்ற பக்தர் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது அவர், கோவிலில் வலம்வந்து சாமி தரிசனம் செய்ய முயன்றுள்ளார். அப்போது கோவிலில் இருந்த அர்ச்சகர் ஒருவர் நடைசாத்தும் நேரம் ஆகிவிட்டதால் பின்னர் வருமாறு கூறியதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அர்ச்சகர் செல்லப்பா என்பவர் தட்டால் தாக்கியதாகவும் அதனால் ராகவேந்திரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்ததாகவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ராகவேந்திரன் மற்றும் அவரது நண்பர்களுடன் அர்ச்சகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலையில் காயம் பட்ட ராகவேந்திரன் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக இருதரப்பிலும் எந்தவித புகாரும் அளிக்காததால் போலீசார், விசாரணை மேற்கொள்ளவில்லை என்பதால் இந்த சம்பவம் குறித்த உண்மையான தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை.
ஆனால் சம்மந்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகமாக பகிரப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.