வேளச்சேரி ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

விமான சாகச நிகழ்ச்சியை காண சென்றபோது ரயில் வர தாமதம்.. தண்டவாளத்திலேயே நடந்து சென்ற மக்கள்..!

Angeshwar G

இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு தினத்தை ஒட்டி நடைபெறும் விமான சாகச நிகழ்வுக்காக சிறப்பு ஏற்பாடுகள் இன்று செய்யப்பட்டிருந்தன.

இதற்காக மக்கள் கூட்டம் மெரினாவில் அதிகளவில் இன்று குவிந்தது. தொடந்து மக்கள் கூட்டம் கடற்கரையை நோக்கி வந்துகொண்டே இருந்தன. விமான சாகச நிகழ்ச்சியை 10 லட்சம் பேர் கண்டுகளிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 4 லட்சம் மக்கள் விமான சாகசங்களை கண்டு களித்தனர்.

#JUSTIN | விமான சாகசம் - சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளிப்பு

கூட்ட நெரிசல் காரணமாக மக்களில் சிலர் மயக்கமடைந்ததும் குறிப்பிடத்தக்கது. 20 க்கும் மேற்பட்ட அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதேவேளையில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் விமான வான் சாகச நிகழ்ச்சியை காண செல்லும் மக்கள் சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் காத்திருந்து, ரயிலில் முண்டியடித்து தொங்கிக் கொண்டு பயணித்தனர். நடைமேடையில் நிற்க கூட இடம் இல்லாத அளவில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரயில் படிகட்டில் பயணித்தவாறு மக்கள் பயணம் மேற்கொண்டனர். அவர்களன்றியும் நடைமேடையே தெரியாத அளவுக்கு ரயிலுக்காக ஏராளமான மக்கள் காத்திருந்தனர்..

இதற்கிடையே வேளச்சேரியில் ரயில்கள் வருவதற்கு தாமதமானதால் தண்டவாளங்களில் பொதுமக்கள் நடந்து சென்றதையும் காண முடிந்தது. சென்னை விமான சாகச நிகழ்ச்சிக்கு தேவையான போதிய ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர். கூடுதல் ரயில்களை குறிப்பிட்ட நேரத்தில் தெற்கு ரயில்வே இயக்கியிருக்க வேண்டும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் மக்கள் தண்டவாளங்களில் நடந்து சென்ற காட்சியும், ரயிலில் தொங்கியபடி பயணம் செய்ததும் காணொளியாக வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.