தமிழ்நாடு

ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்க முயன்ற லாரிகள் ! மக்கள் போராட்டம்

ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்க முயன்ற லாரிகள் ! மக்கள் போராட்டம்

webteam

பூவிருந்தவல்லியில் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பதை கண்டித்து, தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்குட்பட்ட பானவேடுதோட்டம் ஊராட்சியில் பல்வேறு இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு தண்ணீரின் தன்மை மாறி விடுவதாக கூறி அப்பகுதி மக்கள் தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், பானவேடுதோட்டம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 20 அடியில் தண்ணீர் வந்தது, தற்போது லாரிகளில் குடிநீர் திருடப்படுவதால் 100 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது.அதேபோல் விவசாய நிலங்களுக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தை குடிநீர் திருடுவதாக பயன்படுத்துகின்றனர். மேலும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும், இதனால் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

இதனையடுத்து தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூவிருந்தவல்லி காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த நிலை நீடித்தால் இந்த பகுதியில் குடிநீர் பஞ்சம் ஏற்படும், உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் இல்லையென்றால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அதன்பின் அவர்கள் கலைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.