போரூர் ஏரி நீரின்றி பாலைவனமாக காட்சி அளித்து வரும் நிலையில் ஏரியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் சிலர் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கின்றனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கி வந்த போரூர் ஏரி தற்போது நீர் இன்றி காணப்படுகிறது. மொத்தம் 400 ஏக்கர் பரப்பிலான போரூர் ஏரியில் 60 மில்லியன் கன அடி வரை தேக்கி வைக்கலாம். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு தினமும் 40 லட்சம் லிட்டர் குடிநீர் சென்னையின் சில பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் வறட்சி காரணமாக போரூர் ஏரி முற்றிலும் வறண்டு பாலைவனம் போல காட்சி அளிக்கிறது. ஆங்காங்கே மீன்கள் செத்து மிதக்கின்றன. சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் தற்போது சிலர் காலைக்கடன் கழிப்பது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
குடிநீர் பயன்பாட்டுக்கான ஏரியில் யாரும் நுழைந்து அசிங்கப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போதுதான் அடுத்து மழை பெய்தால் கூட சுத்தமான நீரை சேமிக்க முடியும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.