தமிழ்நாடு

புதர்மண்டி கிடக்கும் போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தை சீரமைக்க கோரி மக்கள் கோரிக்கை

புதர்மண்டி கிடக்கும் போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தை சீரமைக்க கோரி மக்கள் கோரிக்கை

webteam

புதருக்குள் கிடக்கும் போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தை சீரமைக்க கோரி, அங்கு அச்சத்துடன் வந்து செல்கின்றனர் அப்பகுதி பொது மக்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வந்து செல்வது வழக்கம். பட்டா சிட்டா மாற்றம், குடும்ப அட்டை பெறுதல் மற்றும் திருத்தம், வாரிசு சான்று, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகள் காரணமாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கும், ஆதார் அட்டை பதிய மற்றும் திருத்தம் செய்ய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆதார் மையத்திற்கும் மக்கள் வருவதுண்டு. முன்னர் இங்கு பொது மக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிந்த காத்திருப்போர் கூடம்தான் தற்போது ஆதார் மையமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் அமர இடமின்றி அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடி மற்றும் சுற்றுச்சுவர் அருகே தரையில் அமர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பகுதியும், புதர்மண்டி காடு போல் காட்சியளிக்கிறது. அலுவலகத்தின் இரண்டு நுழைவு வாயிலில் ஒரு நுழைவுப்பகுதி முழுவதும் புதர்மண்டி, வழியே தெரியாத வண்ணம் உள்ளது. இந்த புதர்களில் விஷ ஜந்துக்கள், பாம்புகள் முதலியவை தங்கியிருக்க வாய்ப்புள்ளதால், அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். இவற்றை பட்டியலிடும் பொதுமக்கள், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் அமர இடம் அமைத்துக்கொடுத்தும், வட்டாட்சியர் அலுலவகத்தை சுற்றியுள்ள புதர்களை அகற்றி தூய்மை படுத்தவும், அலுவலகத்தின் இரண்டு நுழைவு வாயிலையும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.