தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் கொண்டாடிவரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் விடுமுறை நாட்களில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் 3 நாட்களுக்கு சென்னை மெரினா உள்பட தமிழகத்தின் அனைத்து கடற்கரைகளிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை அனைத்து இடங்களிலும் காவல்துறை தடுப்புகளை அமைத்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை கடற்கரை சர்வீஸ் சாலையில் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. பெசன்ட் நகர் உள்பட பிற கடற்கரைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காணும் பொங்கலின்போது இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் கிண்டி பூங்கா, வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம் ஆகிய இடங்களிலும் மக்கள் கூட அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான கொடிவேரிக்கு வந்த பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பொங்கல் விடுமுறையை கொண்டாட வந்த ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்தனர். ஈரோட்டில் உள்ள வஉசி பூங்காவில் வருடந்தோறும் காணும் பொங்கலன்று பெண்கள் மட்டும் பொங்கல் வைத்துக் கொண்டாட அனுமதிக்கப்பட்டுவந்தனர். இந்த ஆண்டு அந்நிகழ்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோலதிருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஏராளமானோர் வந்த நிலையில், அவர்களுக்கும் கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.