செய்தியாளர்: காமராஜ்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள கானிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சக்கரவர்த்தி - வனிதா தம்பதியர். இவர்களது 16 வயது மகள், கடந்த வியாழக்கிழமை வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். ஆண் நண்பரோடு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தத்தில் இருந்த தாய் வனிதா, மரக்காணம் காவல் நிலையத்தில் தனது மகளை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்துள்ளார். அந்தப் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த வனிதா, நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வனிதாவின் மகன் சந்தோஷ், மரக்காணம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மரக்காணம் போலீசார், வனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினரிடம் இன்று ஒப்படைத்தனர்.
இந்நிலையில், புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் வனிதா உயிரிழந்ததாகக் கூறி, வனிதாவின் உடலை கந்தாடு கிராமத்தில் உள்ள மரக்காணம் திண்டிவனம் சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மறியல் காரணமாக திண்டிவனம் மரக்காணம் செல்லும் சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் வனிதாவின், உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலையிலிருந்து உடலை அப்புறப்படுத்தினர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.