செய்தியாளர்: புருஷோத். V
கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்....
நெல்லை மாவட்டம் பாப்பாகுடி ஒன்றியத்திற்குட்பட்ட வேளார்க்குளம் கிராமத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு தனியார் நிறுவனங்கள் புதிதாக கல்குவாரி அமைக்க வேண்டும் என அனுமதி கேட்டுள்ளன. ஊர் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்பகுதி மக்கள் கூறும்போது, “வேளார்குளம் பகுதியில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் புதிதாக இரண்டு கல் குவாரிகள் தொடங்கப்பட உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே வேளார்குளம் அருகே உள்ள துலுக்கப்பட்டி மற்றும் அனந்த நாடார் பட்டி பகுதிகளில் பல குவாரிகள் செயல்பட்டு வருவதால் பல்வேறு வீடுகள் சேதமடைந்து வருகின்றன.
எனவே புதிய கல்குவாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது” என சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்களை அழைத்து பேசிய சார் ஆட்சியர், தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். அதன்பின் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். உரிய நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம் என அப்பகுதி மக்கள் கூறிச் சென்றுள்ளதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.