எண்ணூர் அருகே கோரமண்டல் தொழிற்சாலைக்காக கப்பலில் இருந்து திரவ அமோனியா கொண்டுவர கடலுக்கு அடியில் பதியப்பட்ட குழாயில் நள்ளிரவில் கசிவு ஏற்பட்டது. அதனால், சின்ன குப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய பகுதிகளில், கடும் நெடியுடன் கூடிய கண் எரிச்சல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய சமுதாய நலக்கூடம், தேவாலயங்களில் தஞ்சமடைந்தனர். 15க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதற்கிடையில் ரசாயன கசிவை கண்டித்து எண்ணூர் விரைவு சாலையில் பல்வேறு இடங்களில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். வெளிநபர்கள் உள்ளே வந்துவிடாதபடி ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.