தமிழ்நாடு

திருவண்ணாமலை கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ரூ10 ஆயிரமா? - அதிகாரிகள் ஆய்வு

திருவண்ணாமலை கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ரூ10 ஆயிரமா? - அதிகாரிகள் ஆய்வு

webteam

திருவண்ணாமலை கோயிலில் சாமி தரிசனத்திற்கு முறைகேடாக 10 ஆயிரம் வரை வசூலிப்பதாக வந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில் உலக பிரசித்தி பெற்றது. கிரிவலம், சிவராத்தி என பல நிகழ்ச்சிகளுக்காக மக்கள் இங்கு ஆயிரக்கணக்கில் கூடுகின்றனர். இவ்வளவு பெயர் பெற்ற இந்தக் கோயிலில் பல வகையான மோசடிகள் மற்றும் ஊழல்கள் நடப்பதாக பல பக்தர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனையடுத்து, வேலூரில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளான இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் ஆறு பேர் கொண்ட குழு இன்று அண்ணாமலையார் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அண்ணாமலையார் கோயிலிலும், உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் கருவறையினுள் உட்கார்ந்து ‘அமர்வு தரிசனம்’ செய்வதற்கு கட்டணம் செலுத்தி ரசீது பெற வேண்டும். அப்படி வாங்கினால் மட்டுமே தரிசனம் செய்யலாம் என்பது விதி உள்ளது. ஆனால், அப்படி எதுவும் கட்டணம் செலுத்தாமல் கோயிலில் உள்ள குருக்களும் மற்றும் சில புரோக்கர்களும் பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு தரிசனத்திற்கு அனுமதி வழங்கி வருவது தெரியவந்துள்ளது.

இந்தத் தரிசனத்திற்காக பக்தர்களிடம் முறைகேடாக ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இவ்வாறு வசூல் செய்யப்படும் பணத்தில் பல பேருக்கு பங்கு செல்வதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் கோயில் நிர்வாகத்திற்கு ஒரு பைசாகூட செல்லவில்லை என்றும் பொதுமக்கள் ஏற்கெனவே புகார் கூறி வருகின்றனர்.

இந்தப் புகார்களை விசாரிப்பதற்காக வந்த அதிகாரிகள் கோயில் ஊழியர்களிடமும் குருக்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை குறித்து அரசிடம் தெரிவிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.