சாலை திட்டங்களுக்காக மக்கள் மனம் உவந்து நிலம் அளிக்க முன்வர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தாரமங்கலத்தில் 24 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புறவழிச் சாலையை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர், தொழில்வளர்ச்சிக்கு சாலை மேம்பாடு மிக முக்கியம் என்றார். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருப்பதாகவும் அவர் பெருமையுடன் தெரிவித்தார். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த தேவைப்படும் இடங்களில் பாலங்கள், புறவழிச் சாலைகள் அமைக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் கூறினார்.
சாலைத் திட்டங்கள் வந்தால்தான் விபத்துகளை குறைக்க முடியும் என்ற முதல்வர், சாலை அமைக்க மக்கள் மனம் உவந்து நிலம் வழங்க முன்வர வேண்டும் என்றார். ஓமலூர் - மேட்டூர் இடையே ரயில்வே மேம்பாலங்கள் விரைவில் கட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், சேலம் உருக்காலை வளாகத்தில், ராணுவ தளவாட உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.