ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 30 பழங்குடியின மக்கள், மாவட்டம் மாவட்டமாக சென்று பாத்திர வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது வெயில் அதிகமாக இருக்கும் காரணத்தால் திரையரங்கில் கருடன் திரைப்படம் பார்க்க வந்துள்ளனர். கருடன் திரைப்படத்தைப் பார்க்க 8 மணிக்கே வந்திருந்தும், திரையரங்கைச் சேர்ந்தவர்கள் டிக்கெட் கொடுக்க மறுத்துள்ளனர். ஆனால், பின் வந்தவர்களுக்கு டிக்கெட்டை கொடுத்துள்ளனர். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் ஏன் எங்களுக்கு மட்டும் டிக்கெட் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனை அடுத்து அருகில் இருந்த காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து கடலூர் கோட்டாச்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். மனுவில், “எங்களை எதற்காக அனுமதிக்கவில்லை என்ற காரணத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறோம். தமிழ்நாட்டின் பல இடங்களில் பல திரையரங்குகளில் திரைப்படங்களை பார்த்துள்ளோம். ஆனால் எங்களுக்கு மட்டும் இவர்கள் அனுமதி மறுக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “சின்ன சின்ன குழந்தைங்கள கூட்டிக்கிட்டு படம் கூட பாக்க முடியல. கதவை தட்டினாலும், ‘டிக்கெட் இல்ல, என்ன பண்ண முடியுமோ பண்ணுங்கன்னு’ சொல்றாங்க. 20 டிக்கெட் கேட்டோம்., டிக்கெட் 150ன்னாலும், 200ன்னாலும் கொடுக்க ரெடியாதான் இருந்தோம். எங்கள கேலியா பாக்குறாங்க. 8 மணிக்கு வந்தோம், படமே போட்டாங்க. டிக்கெட் கொடுக்குறேன் கொடுக்குறேன்னு சொல்லி காக்க வச்சு., கடைசியா இல்ல போன்னு சொல்றாங்க. எங்களை சமூகத்தில் இருந்து ஏன் தள்ளி வைக்கிறீங்க.. நாங்க மனுசங்க இல்லையா., நாங்களும் ஓட்டு போடுறோம்., நீங்கள் ஒருத்தர் தள்ளி வச்சீங்கன்னா, எல்லோரும் தள்ளி வைப்பாங்க., சாதியைப் பார்க்கிறீர்களா.. அப்படியானால் ஊரைவிட்டே தள்ளி வைத்துவிடுங்க; இல்லையென்றால் எங்களை சுட்டுக் கொண்ணுடுங்க...” என வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக திரையரங்க உரிமையாளர்களிடம் கேட்டபோது, “இன்று திரையரங்கு நடத்துவது என்பதே சிரமமாக உள்ளது. தியேட்டருக்கு வரும் மக்கள் குறைந்து கொண்டே இருக்கின்றனர். இதுபோல், மக்களை நாங்கள் அனுமதித்தால் அவர்கள் அருகில் மற்ற மக்கள் அமர அச்சப்படுகின்றனர். எனவே நாங்கள் அனுமதிக்கவில்லை” என தெரிவித்தார். சுத்தமாக இல்லை என்பதனால் அனுமதிக்கவில்லை எனகூறுவது சரியான விஷயம் இல்லை என கேட்டபோது, “தொழில்நடத்திப் பார்த்தால்தான் தெரியும். ஒவ்வொருவரும் தொழிலை நடத்துவதற்கு மிகவும் சிரமப்படுகிறோம். அவர்களை சுத்தமாக வரச்சொல்லுங்கள். நாங்கள் அனுமதிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் விசாரணை தொடங்கியது. முதற்கட்ட விசாரணையில், “20 பேரை திரைப்படம் பார்க்க அனுமதிக்கிறோம். மீதமுள்ளவர்கள் நாளை திரைப்படம் பார்க்கட்டும்” என திரையரங்கில் இருந்து தெரிவித்ததாக கோட்டாட்சியர் அலுவலகத்தின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து வட்டாட்சியர் நடவடிக்கையை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் திரையரங்கில் படம் பார்த்தனர்.