கடந்த 1ஆம் தேதி அதிகாரிகளை கிராமத்திற்கு நுழைய விடாமல் கத்தி மற்றும் கம்புகளால் விரட்டிய பழங்குடியினர் கிராமத்திற்கு இன்று நேரில் சென்ற நகராட்சி ஆணையர் அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புத்தூர்வயல் பழங்குடியினர் கிராமத்தில் கடந்த 1ஆம் தேதி 9 குழந்தைகள் உட்பட 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வரச்சென்ற அரசுத்துறை பணியாளர்களை கிராமத்தில் இருந்த ஆண்கள் கத்தி மற்றும் கம்புகளைக் கொண்டு தாக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து ஒருவழியாக நோய் தொற்றுக்கு ஆளானவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதைத் தொடர்ந்து தற்போது புத்தூர்வயல் பழங்குடியினர் கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களது நிலையை அறிந்து கொண்ட நகராட்சி ஆணையர் பாஸ்கரன் இன்று நேரில் சென்று அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். தொடர்ந்து நகராட்சி ஆணையர் கூறுகையில் ‘அன்றைய தினம் பழங்குடியின மக்கள் அறியாமை காரணமாக அவ்வாறு நடந்து கொண்டார்கள். இருப்பினும் அவர்கள் மீது காவல் துறையில் எந்தவிதமான புகாரும் அளிக்கவில்லை’ என்றார்.