தமிழ்நாடு

“சுடுகாட்டை காணோம்” - அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

“சுடுகாட்டை காணோம்” - அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

webteam

திருவள்ளூரில் இறந்தவரின் சடலத்தை புதைக்க சென்றவர்கள் சுடுகாடு மாயமாகி இருப்பதாக கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

திருவள்ளூர் நகராட்சியில் 18-வது வார்டுக்கு உட்பட்ட ஜெயா நகர் பகுதியில் விஜயலட்சுமி என்ற மூதாட்டி நேற்றிரவு உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் சடலத்துடன் சுடுகாட்டிற்கு சென்றனர். அப்போது எரிமேடை மற்றும் சுடுகாட்டை அழித்து விட்டு அதன் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடைபெற்று வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சடலத்தை புதைக்க வந்த உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், அந்த பகுதியை நில அளவியரை (சர்வேயர்) வைத்து அளவீடு செய்கையில் அந்த இடம் சுடுகாடு அல்ல என்பதும் அதன் அருகில் உள்ள இடம்தான் சுடுகாடு என்பதும் தெரியவந்தது. அங்கு சென்று அடக்கம் செய்யுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள் கடந்த 40-ஆண்டு காலமாக அடக்கம் செய்த இடத்தில் தான் சடலத்தை அடக்கம் செய்வோம் என கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திருவள்ளூர் வட்டாட்சியர் இந்த இடத்தில் சடலத்தை புதைக்க அனுமதிக்க முடியாது என்றும் மீறினால் அனைவரையும் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். இதனை அடுத்து சடலத்தை மாற்று இடத்தில் புதைத்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.