தமிழ்நாடு

மக்கள் வைரஸின் கொடூரத்தை உணராமல் இருக்கின்றனர்- சீனாவில் படித்த தமிழக மாணவி வேதனை

மக்கள் வைரஸின் கொடூரத்தை உணராமல் இருக்கின்றனர்- சீனாவில் படித்த தமிழக மாணவி வேதனை

webteam

திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் வசித்து வரும் செந்தில்குமார்- பரிபூரண தேவி தம்பதியின் மூத்த மகள் நிருபமா. இவர் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி மருத்துவம் படிப்பதற்காக திருச்சியிலிருந்து சீனா நாட்டில் உள்ள உரும்ஜி பகுதிக்கு சென்றார். அவர் அங்குள்ள ஜின்ஜியாங் மருத்துவ பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மருத்துவ படிப்பை துவங்கினார். கல்வியை தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வெகு வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

சீனாவில் இவர் வசித்து வந்த இடம் ஹூகான் மாகாணத்தில் இருந்து 3000 கிலோ மீட்டர் தொலைவில் இருந்துள்ளது. கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை அறிந்த சீன அரசு உடனடியாக பல்கலைக்கழகத்தில் இருந்த மருத்துவ மாணவர்களை மிகவும் பாதுகாப்பாக தனிமைப்படுத்தி ஓரிடத்தில் கவனமாக தங்க வைத்துள்ளது. 

ஒரு கட்டத்தில் அங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் இந்தியாவிற்கு திரும்ப கடினமாக முயற்சி செய்துள்ளனர். அதில் நிருபமாவும் ஒருவர். கடும் இடர்பாடுகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி திருச்சி வந்தடைந்தார். அவரிடம் சுகாதாரத் துறையை சேர்ந்த அதிகாரிகள், தொலைபேசியில் பேசி கண்காணித்து வருகின்றனர்.

இவரிடம் புதிய தலைமுறை தொடர்பு கொண்டு பேசியது. அப்போது அவர் கூறும் போது “ நான் கிட்டத்தட்ட ஹூகான் மாகாணத்தில் இருந்து 3000 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தேன். இருப்பினும் சீன அரசு என்னையும் என்னை சார்ந்தவர்களையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்தது. பின்னர் நான் இந்தியா வந்து சேர்ந்தேன். 

இந்தியாவை பார்க்கும்போது மக்கள் வைரஸின் தாக்கத்தை உணராமல் இருக்கின்றனர். இதனை  தவிர்த்து அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நான் மருத்துவம் படிப்பதே மக்களுக்கு சேவை செய்யத் தான். மீண்டும் சீனாவில் சகஜ நிலை திரும்பியவுடன் அங்கு சென்று மருத்துவப் படிப்பை தொடர்வேன்” என்றார். நிருபமா தற்போது தினமும் ஐந்து மணி நேரம் ஆன்லைன் மூலம் தன்னுடைய மருத்துவ படிப்பை தொடர்ந்து வருகிறார். 


அவருடைய தந்தை செந்தில் குமார் பேசியபோது சீனா “வைரஸ் பாதிப்பையடுத்து எனது மகளை எப்படியாவது சீனாவில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என எண்ணினேன். உலகமே கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்று வரும் நிலையில் என்னுடைய மகள் மருத்துவ படிப்பை முடித்து கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை புரிவதே எனது விருப்பம்” என்றார்.